இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 7.31 கோடி டன்னாக உள்ளது.
2022 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.72 கோடி டன்னாக இருந்தது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.71 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கில் 94.89 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் மட்டும் கடந்த ஏப்ரலில் 5.76 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ததன. 2022 ஏப்ரலில் உற்பத்தி 5.35 கோடி டன்னாக இருந்தது. அதனுன் ஒப்பிடுகையில் கோல் இந்தியா மற்றும் துணை நிறுவனங்களின் உற்பத்தி கடந்த ஏப்ரலில் 7.67 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், சிங்கரேணி காலியரிஸ் கம்பெனி லிமிடெட்டின் (எஸ்சிசிஎல்) நிலக்கரி உற்பத்தி 4.77 சதவீதம் அதிகரித்து 55.7 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 53.2 லட்சம் டன்னாக இருந்தது.
2022 ஏப்ரலில் 84.1 லட்சமாக இருந்த மற்ற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்லில் 1 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 6.13 கோடி டன்னாக இருந்த மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் இந்த ஏப்ரலில் 6.66 சதவீதம் அதிகரித்து 6.54 கோடி டன்னாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இருந்தாலும், உலா் எரிபொருளை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதால், நாட்டின் நிலக்கரி தேவைக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, எஃகு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருளான கோக்கிங் நிலக்கரிக்கு இறக்குமதியையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது.