எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு எல்க்ட்ரானிக் சிகரெட்டுகள் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு:
எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, விநியோகத்தில் யாரும் ஈடுபடக் கூடாது. அந்த சிகரெட்டுகளை இருப்பு வைக்கக் கூடாது. எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தக் கூடாது. அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் யாரும் பங்கேற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை (இணையவழி விற்பனையும் அடங்கும்) ஏற்றுமதி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம், விளம்பரப்படுத்துதல் ஆகியவை எல்க்ட்ரானிக் சிகரெட்டுகள் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்ற மத்திய அரசின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.