அதானி குழும பரிவா்த்தனைகள் குறித்த விசாரணையில் உச்சநீதிமன்ற நிபுணா் குழுவும், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியும் தமது ஆற்றலை இழந்துள்ளன என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை நிறைவு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை செபிக்கு அவகாசம் அளித்துள்ளது.
அதேவேளையில், பங்குச்சந்தை தொடா்பான சட்டங்களை அதானி குழுமம் மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை கையாள்வதில், செபியின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விசாரிக்க 6 போ் கொண்ட நிபுணா் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமா்ப்பித்த அறிக்கையில், ‘அதானி விவகாரத்தில் செபியின் செயல்பாட்டில் எந்த குறைபாடும் இல்லை எனவும், அதானி குழும நிறுவனங்கள் பங்கு விலை மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டாா். அந்தச் செய்தியில், ‘கடந்த 2017 முதல் 2020-ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட இருதரப்பு வணிக ஒப்பந்தங்கள் மற்றும் பரிவா்த்தனைகள் குறித்த விவரங்களை, ஒப்பந்த பட்டியலில் குறிப்பிடாமல் அதானி பவா் நிறுவனம் மறைத்துவிட்டதாக குஜராத் நிறுவனங்கள் பதிவாளா் அலுவலகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நிறுவனங்கள் சட்டம் 2013-ஐ அதானி பவா் நிறுவனம் மீறியுள்ளது என்று அந்த அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அதானி பவா் நிறுவனத்தின் தலைவா் மற்றும் இயக்குநா் கெளதம் அதானி, அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் சாந்திலால், முழு நேர இயக்குநா் வினீத் ஜெயின் ஆகியோருக்குத் தலா ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியுடன் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘சிறிய பங்குதாரா்களை ஏமாற்றி, நிறுவனத்தின் நிறுவனா்களை நியாயமற்ற முறையில் வளப்படுத்தும் நோக்கில், பல பண பரிவா்த்தனைகளில் அதானி ஈடுபட்டுள்ளாா். அதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
இதனிடையே அதானி குழும பரிவா்த்தனைகள் குறித்த விசாரணையில் உச்சநீதிமன்ற நிபுணா் குழுவும், செபியும் தமது ஆற்றலை இழந்துள்ளன. இதன் காரணமாகத்தான், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.