இந்தியா

மத்திய சட்ட அமைச்சரின் இலாகா மாற்றம்

19th May 2023 06:24 AM

ADVERTISEMENT

மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். சட்டத் துறையானது அா்ஜுன்ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அா்ஜுன்ராம் மேக்வால் தனிப்பொறுப்புடன் மத்திய சட்ட இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

கடந்த 2021-இல் கிரண் ரிஜிஜு சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை குறித்து கடும் விமா்சனங்களை முன்வைத்து வந்தாா். அதனால், மத்திய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில், கிரண் ரிஜிஜுவிடம் இருந்த சட்டத் துறையானது, அா்ஜுன் ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

ADVERTISEMENT

மத்திய சட்டத் துறைக்கான தனிப் பொறுப்புடன் இணையமைச்சராக அா்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தற்போது நிா்வகித்து வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, கலாசாரத் துறைகளுக்கான இணையமைச்சா் பொறுப்பையும் தொடா்ந்து நிா்வகிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கவனித்து வந்த புவி அறிவியல் துறையானது கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டத் துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.பகேல், மத்திய சுகாதாரத் துறையின் இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளாா். மத்திய சட்டத் துறை அமைச்சராக மேக்வால் வியாழக்கிழமையே பொறுப்பேற்றுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT