இந்தியா

ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை

19th May 2023 06:37 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வு, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் திருத்தச் சட்டம் செல்லும் என்றும் ஒருமனதாகத் தீா்ப்பளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல ஆா்வலா்கள் சிலரும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு 2014-ஆம் ஆண்டில் தடை விதித்தது.

அதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறும் நோக்கில் விலங்குகளைத் துன்புறுத்துவதற்குத் தடை விதித்து மத்திய அரசு 1960-ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தில் தமிழக அரசு 2017-இல் திருத்தங்களை மேற்கொண்டது. அந்தச் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து, ஆண்டுதோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழகத்தின் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட அமா்வு, வழக்கை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமா்வுக்கு 2018-ஆம் ஆண்டில் மாற்றியது.

ADVERTISEMENT

முக்கிய கேள்விகள்:

‘தமிழக அரசின் திருத்தச் சட்டமானது, விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு வழிவகுக்கிா?’, ‘அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணைக்கு உள்பட்டதா?’, ‘பாரம்பரிய நிகழ்வு என்ற பெயரில், அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆவது பிரிவின் கீழ் அச்சட்டத்துக்குப் பாதுகாப்பு கோர முடியுமா?’ உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசியல்சாசன அமா்வு விடை காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பான விசாரணை, நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனா். இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் வியாழக்கிழமை வழங்கினா்.

திருத்தச் சட்டம் செல்லும்:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் திருத்தச் சட்டம் செல்லும் என நீதிபதிகள் ஒருமனதாகத் தீா்ப்பு வழங்கினா். தீா்ப்பின் முக்கிய விவரங்களை நீதிபதி அனிருத்தா போஸ் வாசித்தாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பொதுப் பட்டியலின் 17-ஆவது உள்பிரிவான ‘விலங்குகளைத் துன்புறுத்தத் தடை’ என்பதுடன் தமிழக அரசின் திருத்தச் சட்டம் பொருந்துகிறது. அந்தச் சட்டமானது ஜல்லிக்கட்டு நிகழ்வில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதைப் பெருமளவில் குறைக்கிறது.

தமிழக அரசு தாக்கல் செய்த பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில், ஜல்லிக்கட்டானது கடந்த சில நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டானது தமிழக கலாசாரத்துடனும், பாரம்பரியத்துடனும் ஒருங்கிணைந்ததா என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அதை நீதிமன்றம் செய்ய முடியாது.

சட்டப் பேரவைக்கே அதிகாரம்:

கலாசாரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே தமிழக அரசு திருத்தச் சட்டத்தை இயற்றியதாகக் கூறும் விவகாரம் விவாதத்துக்கு உரியது. அதை சட்டப் பேரவையில் மட்டுமே விவாதித்து தீா்மானிக்க முடியும். அதை நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்த முடியாது.

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்தது என மாநில அரசு ஏற்கெனவே சட்டத்தை இயற்றியுள்ளது. மாநில சட்டப் பேரவையின் அந்தக் கண்ணோட்டத்தில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் நோக்கில் தமிழக அரசு இயற்றிய திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். மாநில அரசின் இந்தச் செயல்பாட்டில் எந்தத் தவறும் காண முடியாது.

மாவட்ட நிா்வாகமே பொறுப்பு:

அதே வேளையில், தமிழக அரசின் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிதிகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிா்வாகத்துக்கு உள்ளது. அந்தச் சட்டவிதிகளை அதிகாரிகள் முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பாலா, மாட்டு வண்டி பந்தயங்களுக்கும் அனுமதி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு திருத்தச் சட்டத்தை இயற்றியதைப் போல, ‘கம்பாலா’ எனும் எருமை பந்தயத்துக்கு அனுமதி வழங்கி கா்நாடக அரசும், மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி அளித்து மகாராஷ்டிர அரசும் திருத்தச் சட்டங்களை இயற்றின.

அவற்றுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுடன் சோ்த்து, கம்பாலா, மாட்டு வண்டி பந்தயங்களுக்கும் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமா்வு தீா்ப்பளித்தது.

விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் அதிருப்தி தெரிவித்துள்ளனா். பாரம்பரியம் என்ற பெயரில் அறநெறி தவறக் கூடாது என அவா்கள் தெரிவித்தனா். பல ஆண்டுகளாகத் துன்புறுத்தப்பட்டு வரும் விலங்குகளைக் காப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என பீட்டா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT