இந்தியா

குஜராத்திலிருந்து காணாமல்போன 40 ஆயிரம் பெண்கள் எங்கே?

8th May 2023 04:04 PM

ADVERTISEMENT


ஆகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், குஜராத் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பேரும், 2018ல் 9,246 பெண்களம், 2019ல் 9,268 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள் என்கிறது தகவல்கள். 2020லும் இது 8,290 ஆக இருந்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 8,290 ஆக உள்ளது.

இது தொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சுதீர் சின்ஹா கூறுகையில், குஜராத்தில் மனிதர்கள் காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கையில், சில வழக்குகளில், பெண்கள் மற்றும் சிறுமிகள் அண்டை மாநிலங்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட கடத்திச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

காவல்துறையினர், பெண்கள் காணாமல் போகும் வழக்குகளை கவனத்துடன் கையாள்வது இல்லை. பெற்றோர்கள் பல காலம் தங்கள் பிள்ளைகள் திரும்ப வருவார்கள் என்று காத்திருக்கும் நிலையே உள்ளது. கொலை வழக்குகளைப் போல பெண் குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பிரிட்டிஷ் கால முறையிலேயே இன்னமும் பெண்கள் காணாமல் போகும் வழக்குகளை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர். ரஞ்சன் பிரியதர்ஷி கூறுகையில், மனிதக் கடத்தல் குற்றங்கள், ஏதோ பெண்கள் காணாமல் போனது போல சித்தரிக்கப்படுகிறது. எனது பதவிக்காலத்தில், நான் பார்த்த பல வழக்குகளில் பெண்கள் காணாமல் போன வழக்குகளில், பெரும்பாலும் அவர்கள் கடத்தப்பட்டு, வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பார்கள்.

கேதா மாவட்டத்தில் நான் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, உத்தரப்பிரதேசத்திலிருந்து கூலித் தொழிலாளியாக வந்த ஒருவர், இந்த மாவட்டத்திலிருந்து ஏழைப் பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று தனது சொந்த ஊரில் விற்பனை செய்து வந்தார். அங்கு அவர்கள் பல பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். அப்படி சில வழக்குகளில் மட்டும் பெண்கள் மீட்கப்பட்டனர். ஆனால் பல வழக்குகளில் பெண்கள் மீட்கப்படவில்லை.

இது குறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாஜக தலைவர்கள், கேரளத்தில் உள்ள பெண்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், குஜராத்திலேயே சுமார் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்திலேயே இந்த நிலை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT