இந்தியா

இன்றுடன் ஓய்கிறது கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்

DIN


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (மே 8) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடகப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரசாரம் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை)மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப்போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் 209, பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவிர 918 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தலைவர்கள் முற்றுகை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு திரட்டி வருகின்றனர். கட்சித் தலைவர்களின் முற்றுகையால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பிரதமர் மோடியின் பயணம்: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த ஏப். 29-ஆம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி, தனது 7 நாள்கள் சுற்றுப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார்.
கடந்த 7 நாள்களில் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் 18 பொதுக் கூட்டங்களில் அவர் பேசினார். 5 திறந்தவேன் பிரசார ஊர்வலங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

கர்நாடகத்தில் திறந்தவேனில் ஊர்வலமாகச் சென்று பிரதமர் மோடி வாக்குகளைத் திரட்டுவது இதுவே முதல்முறையாகும். பெங்களூரில் மட்டும் 2 நாட்கள் 36 கி.மீ. ஊர்வலமாகச் சென்று, 28 தொகுதிகளில் மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.

பாஜக தலைவர்கள்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஒரு மாத காலமாகவே கர்நாடகத்தில் முகாமிட்டு பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர பிரசாரம் செய்துவருகிறார்.

இவர்களை தவிர, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங்,  எஸ்.ஜெய்சங்கர், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான் உள்பட 98 மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, சதானந்த கௌடா போன்ற தலைவர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, சிவமொக்கா, கோலார் உள்பட மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சென்று தமிழில் பேசி பிரசாரம் செய்தார்.

இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல், பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள அதிமுக, அதன் மாநிலச் செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை த் திரட்டினார்.

காங்கிரஸ்: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சௌஹான், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், வீரப்ப மொய்லி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்டோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 2 நாட்களுக்கு பிரசாரம் செய்தார்.

கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்துவந்த ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தங்களது பிரசாரத்தை பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் மைசூரு, மண்டியா, சாமராஜ் நகர் மாவட்டங்களில் முகாமிட்டு, திங்கள்கிழமை தங்களது இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

மஜத: மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.டி.தேவெ கௌடா, ஹாசன், மண்டியா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தனது தள்ளாத வயதில் தேவெ கௌடா பிரசாரம் செய்தது வாக்காளர்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.

எச்.டி.தேவெகௌடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி, மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். மஜத மாநிலத்தலைவர் சி.எம்.இப்ராஹிம் உள்ளிட்டமுக்கியத் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரசாரம் ஓய்கிறது: வாக்குப் பதிவு மே 10}ஆம் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுவதால் தேர்தல் பிரசாரங்கள் திங்கள்கிழமை (மே 8) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு, வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்ய செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிவரை  வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT