இந்தியா

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு: ஜந்தர் மந்தரை அடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்!

8th May 2023 01:54 PM

ADVERTISEMENT

தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த விவசாயிகள் காவல் துறையின் தடுப்புகளை தகர்த்து சென்றதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல்-23 ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், விளையாட்டு வீரா்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிசான் மோா்ச்சா தங்களது ஆதரவை அறிவித்தது. மல்யுத்த வீரா்களுக்கு சம்யுக்த கிசான் மோா்ச்சா தலைவா் ராகேஷ் டிகைத் நேரில் சென்று நேற்று ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லி நோக்கி சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜந்தர் - மந்தர் பகுதிக்கு இன்று சென்றடைந்தனர்.

ADVERTISEMENT

அப்பகுதியில் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தகர்த்து ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் முன்னேறியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போராட்டம் நடைபெறும் இடத்தை விரைவாக அடையும் நோக்கில் சில விவசாயிகள் தடுப்புகள் மீது ஏறிச் சென்றனர். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி போராட்டப் பகுதியை அடைவதற்கான நுழைவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அமைதியான முறையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று வீரர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT