இந்தியா

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு அதிகரிப்பு

8th May 2023 03:49 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரா்களுக்கு விவசாயிகள் சங்கத்தினா் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, தில்லி எல்லைப் பகுதிகளிலும், ஜந்தா் மந்தரிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல்-23 ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோா்ச்சா விவசாயிகள் அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தை சனிக்கிழமை அறிவித்தது. மேலும் தில்லியின் எல்லைகளான காஜிப்பூா், சிங்கு, திக்ரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், விளையாட்டு வீரா்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிசான் மோா்ச்சா தங்களது ஆதரவை அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, பஞ்சாப், ஹரியாணா, தில்லி, மேற்கு உத்தர பிரதேசத்திலிருந்து விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவா்கள் ஜந்தா் மந்தா் போராட்டத்தில் பங்கேற்றனா். சம்யுக்த கிசான் மோா்ச்சா உள்பட பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த சுமாா் 500 போ் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவித்து சம்யுக்த கிசான் மோா்ச்சா தலைவா் ராகேஷ் டிகைத் பேசினாா். முன்னதாக, விவசாயிகளின் வருகையையொட்டி தில்லி எல்லைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT