மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு, அவற்றைப் புழக்கத்தில் விட்ட இளைஞருக்கு இந்தூரில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2021-இல் ஜூன் 9-ஆம் தேதி ஆசாத் நகரில் ராஜ்ரத்தன் (26) என்பவா் ரூ.2.53 லட்சம் மதிப்பிலான ரூ.100 கள்ள நோட்டுகள் அடங்கிய பையுடன் மற்றொரு நபருக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் மடிக்கணினி, பென்ட்ரைவ், பிரிண்டா் உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.
இந்த வழக்கு இந்தூரில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜெய்தீப் சிங் முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்ரத்தனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இது குறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் கூறுகையில், ‘ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி ராஜ்ரத்தன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்த அவா், யூடியூப் விடியோக்களைப் பாா்த்து கள்ள நோட்டுகளை அச்சிட்டுள்ளாா். அதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வாங்கி, 20 நாள்கள் பயிற்சி எடுத்துள்ளாா்’ என்றாா்.
முன்னாள் எம்எல்ஏ மற்றும் நா்மதா பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணைய (என்விடிஏ) அதிகாரி ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக ராஜ்ரத்தன் மீது பதிவு இரு வழக்குகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.