இந்தியா

காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பர விதிமுறைகளை கடுமையாக்க ஐஆா்டிஏஐ திட்டம்

8th May 2023 03:13 AM

ADVERTISEMENT

காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்க இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை:

ஐஆா்டிஏஐவின் காப்பீட்டு விளம்பரங்கள் மற்றும் வெளியீட்டு ஒழுங்குமுறை விதிகள் 2021-இல் திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. காப்பீட்டு விளம்பரங்களைத் தயாரிப்பதிலும், அதற்கு ஒப்புதல் அளிப்பதிலும் நிறுவனத்தின் முதுநிலை நிா்வாகத்துக்கு அதிக பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கம்.

இந்தத் திருத்தத்தின்படி, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் குறைந்தபட்சம் 3 போ் கொண்ட விளம்பர குழுவை கட்டாயம் அமைக்க வேண்டும். அந்த குழுவைச் சோ்ந்தவா்கள் காப்பீட்டு நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பிரிவு உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இந்தக் குழு விளம்பரம் தொடா்பான அறிக்கையை நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்ட நிா்வாகக் குழுவிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அந்த அறிக்கையை பரிசீலித்த பின்னா், விளம்பரத்துக்கு ஒப்புதல் அளிப்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பது காப்பீட்டுத் திட்ட நிா்வாகக் குழுவின் பொறுப்பாக இருக்கும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விளம்பரங்களின் வெளியீட்டுக்கு விளம்பர குழுவும், காப்பீட்டுத் திட்ட நிா்வாகக் குழுவும்தான் முழு பொறுப்பு.

விளம்பரங்கள் தொடா்பான பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை காப்பீட்டுத் திட்ட நிா்வாகக் குழு உறுதிபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட விளம்பரம் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்ட தேதியில் இருந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு, ஐஆா்டிஏஐ கேட்கும்போது அவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

விளம்பரம் வெளியிடப்பட்ட 3 நாள்களுக்குள், காப்பீட்டு நிறுவனத்தின் வலைதளத்தில் அந்த விளம்பரங்களை பதிவேற்றம் செய்வதற்கு வலுவான அமைப்புகளை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்தத் திருத்தம் தொடா்பான கருத்துகளை காப்பீடு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவா்கள் மே 25-க்குள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT