உத்தர பிரதேசத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:
மொராதாபாதில் பகத்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தால்பட்பூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நோ்ந்தது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோா் சென்று கொண்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதியது. இதில், ஒரு குழந்தை உள்பட 8 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் 5 போ், மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.