இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ராணுவ தரைப்படையில் முதல்முறையாக பெண் அதிகாரிகளை பணியமா்த்துவதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளாா்.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவத்தின் தரைப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பெண்கள் அதிகாரிகள் பணியில் இணைக்கப்பட்டு வருகின்றனா்.
தரைப்படையின் சூழலியல் பாதுகாப்புப் பணி பிரிவு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சாா்ந்த பணிப் பிரிவு, ரயில்வே பொறியாளா் படைப் பிரிவு ஆகியவற்றில் ஏற்கெனவே பெண் அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இப்பிரிவுகளில் பெண் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தரைப்படையில் அவா்களுக்கான வாய்ப்பை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியையொட்டி, பொறியாளா் படைப் பிரிவின்கீழ் பெண் அதிகாரிகளை பணியமா்த்துவதற்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளாா்.
மேலும், தில்லியில் உள்ள தரைப்படையின் தலைமையகம், தலைமை இயக்குநரகம் ஆகியவற்றில் அலுவல் அதிகாரிகளாக பெண் அதிகாரிகளை நியமிக்கவும் அமைச்சா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். தொழில்முறை சாா்ந்த தங்களது லட்சியங்களை எட்டுவதுடன், ஆண் அதிகாரிகளுக்கான அதே பயிற்சி மற்றும் பணிச்சூழலில் பெண் அதிகாரிகளும் சேவையாற்ற வாய்ப்பளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.