இந்தியா

சரத் பவார் திடீர் விலகல்: 63 ஆண்டு கால அரசியலுக்கு ஓய்வு

3rd May 2023 04:38 AM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் (82) செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார். 63 ஆண்டுகள் நீண்ட அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரத் பவார், திடீரென கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 1999-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய சரத் பவார், நான்கு முறை மகாராஷ்டிர முதல்வராகவும், மத்தியில் பாதுகாப்பு மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
 2019- மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனை கட்சியை விலக வைத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்ததில் சரத் பவார் முக்கியப் பங்காற்றினார். எனினும், அதிருப்தி சிவசேனை எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவுடன் மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
 இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, "15 நாள்களில் தில்லி, மகாராஷ்டிர அரசியலில் அரசியல் வெடிகுண்டு வெடிக்க உள்ளது' என்று கூறியிருந்தார்.
 அதற்கு ஏற்ப, மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலின் கூடுதல் தகவல்கள் அடங்கிய பிரதியை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சரத் பவார், யாரும் எதிர்பாராத வகையில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
 இது அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 அந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய சரத் பவார், "கடந்த 1960-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி எனது அரசியல் பயணம் தொடங்கியது. 63 ஆண்டுகளாக நீடிக்கும் அரசியல் பயணத்தில், இந்தியாவுக்கும் மகாராஷ்டிரத்துக்கும் பல்வேறு நிலைகளில் சேவையாற்றியுள்ளேன்.
 எனது நீண்ட பொது வாழ்க்கையில் பின்வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
 தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து முடிவு செய்ய கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
 அந்தக் குழுவில் கட்சியின் முன்னணி தலைவர்களான அஜீத் பவார், அனில் தேஷ்முக், சுப்ரியா சுலே, பி.சி.சாக்கோ, கே.கே.சர்மா, பிரஃபுல் படேல் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும்.
 தற்போது நான் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வரும் நிலையில், அந்தப் பதவிக் காலம் நிறைவடைய 3 ஆண்டுகள் உள்ளன. இந்தக் காலத்தில் இந்தியா மற்றும் மகாராஷ்டிர பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவேன்' என்றார் அவர்.
 முடிவை ஏற்க மறுப்பு: நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் சரத் பவாரின் முடிவை ஏற்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவார் தொடர வேண்டும் என்று அவர்கள் பலத்த குரல் எழுப்பினர்.
 அவர்களுக்குப் பதிலளித்த சரத் பவார், "நான் தலைவர் பதவிலியிருந்து விலகினாலும், கட்சித் தொண்டர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பேன்' என்று தெரிவித்தார். சரத் பவாரின் முடிவுக்கு கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் வேதனை தெரிவித்தனர். தனது முடிவை அவர் திரும்பப் பெறவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
 3 நாள்கள் வேண்டும்: சரத் பவாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூல் வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகும், அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
 பலர் தங்களின் கட்சிப் பொறுப்புகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் மூத்த தலைவர் அஜீத் பவார் பேசுகையில், "கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் வற்புறுத்தலை கருத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவாருக்கு 2 அல்லது 3 நாள்கள் அவகாசம் வேண்டும்' என்று தெரிவித்தார்.
 இதனிடையே கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்து கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழு முடிவு செய்ய வேண்டும் என்று சரத் பவார் தெரிவித்த நிலையில், அவரின் இல்லத்தில் அந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
 "மறுபரிசீலனை செய்ய வேண்டும்'
 தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவாரின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மகா விகாஸ் அகாடி வலியுறுத்தியுள்ளது.
 மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட் கூறுகையில், "நாட்டில் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க புதிய சுதந்திர போராட்டம் நடைபெற்று வரும்சூழலில் சரத் பவார் விலகக் கூடாது' என்றார்.
 உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரௌத், "சரத்பவார் போன்ற தலைவர்கள் அரசியலை விட்டு எப்போதும் விலக மாட்டார்கள். இது உள்கட்சி விவகாரம் என்பதால் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்போதைய அரசியல் சூழலில் அவரது ஆலோசனை நாட்டிற்கு முக்கியமானது. அவரது பதவி விலகல் மகா விகாஸ் அகாடியைப் பாதிக்காது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
 சரத் பவாரின் சகோதரி சரோஜ் பாட்டீல் கூறுகையில், "சரத் பவாரின் உடல் நலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தலைவர் பதவிக்கு மற்றொருவரை தேர்வு செய்த பிறகு அவர் விலக வேண்டும்' என்றார்.
 
 

Tags : Sharad Pawar
ADVERTISEMENT
ADVERTISEMENT