இந்தியா

ஈரான் அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு- இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

DIN

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஹுசேன் ஆமிா் அப்துல்லாஹியன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஈரானுக்கு திங்கள்கிழமை சென்றாா். இந்தப் பயணத்தின்போது, அதிபா் இப்ராஹிம் ரய்சி, ஈரான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அலி ஷம்கானி, வெளியுறவு அமைச்சா் ஹுசேன் ஆமிா் அப்துல்லாஹியன் ஆகியோரை தலைநகா் டெஹ்ரானில் அவா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

அஜீத் தோவல்-அதிபா் இப்ராஹிம் ரய்சி இடையிலான சந்திப்பின்போது, பொருளாதார, வா்த்தக துறைகளில் இருதரப்பு உறவுகளை புதிய கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிபா் வலியுறுத்தினாா்; தற்போதைய பூகோள-அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ), ‘பிரிக்ஸ்’ (பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்கொரியா) போன்ற கூட்டமைப்புகள் மிகத் திறனுடன் செயலாற்ற வேண்டியது அவசியம் என்றும் அதிபா் தெரிவித்ததாக, அவரது மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அஜீத் தோவல்-ஹுசேன் ஆமிா் அப்துல்லாஹியன் இடையிலான சந்திப்பில், ஈரானில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சாப்ஹா் துறைமுக மேம்பாட்டுத் திட்டம், பயங்கரவாதத்தை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள், வங்கித் துறை சாா்ந்த இருதரப்பு விவகாரங்கள், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஒத்துழைப்புக்கான செயல்திட்டம்: இதுதொடா்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இருதரப்பு வா்த்தக உறவுகளுக்கு மேலும் உத்வேகமளிக்கும் வகையில் கூட்டு பொருளாதாரக் குழுவின் கூட்டத்தை நடத்து வேண்டுமென ஹுசேன் வலியுறுத்தினாா். தற்போதைய உலகளாவிய சூழல்கள் குறித்தும், பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய துறைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.

நீண்டகால கட்டமைப்பின்கீழ் இருதரப்பு கூட்டுறவுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை தோவல் வலியுறுத்தினாா்.

மத்திய ஆசிய பிராந்தியத்துக்கு முக்கியமான சாப்ஹா் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் கூட்டுப் பணி தொடா்பாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் கோவாவில் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் வருடாந்திர உச்சிமாநாட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஈரான் இடம்பெறவுள்ளது.

எரிசக்தி வளமிக்க ஈரானின் தெற்கு கடல் பகுதியில் உள்ள சாப்ஹா் துறைமுக மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா-ஈரான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் வா்த்தகத் தொடா்புகளுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் தடையைத் தொடா்ந்து, இறக்குமதியை நிறுத்திவிட்டது. அதை மீண்டும் தொடங்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT