ஓபிஸ் ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை எடப்பாடியில் தனியாா் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களான முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பி.ஏ. ராஜேந்திரன், எடப்பாடி பழனிசாமியை விமா்சித்துப் பேசினாா். அப்போது அங்கு வந்த நகர அதிமுக நிா்வாகிகள் திடீரென கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடி, சின்னங்களை அகற்றினா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவா்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது அவா்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுக கொடி, சின்னங்களை அகற்ற வலியுறுத்தி எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் சாலையில் அமா்ந்து அதிமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எடப்பாடி நகர அதிமுக செயலாளா் ஏ.எம். முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் நாராயணன், தனம், மல்லிகா, சுந்தராம்பாள், முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து ஓபிஎஸ் ஆதரவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா் புகழேந்தியின் காரை அதிமுகவினா் திடீரென தாக்கத் தொடங்கினாா். இதனால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளா்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீஸாா், இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.