தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை குற்றம்சாட்டினால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையிலாவது சம்பவத்தின் முழு விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அப்போதுதான், அந்த வழக்கு எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமா என்பதை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிப்பதற்கு முன்பே முடிவு செய்ய இயலும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
கழிவுநீா் வெளியேற்றம் தொடா்பான பிரச்னையில் அண்டை வீட்டுக்காரா் குடும்பத்துடன் திட்டியதாக கூறி மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா் எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை ரத்து செய்ய அலகாபாத் உயா்நீதிமன்ற மறுத்ததையடுத்து, மேல் முறையீட்டுக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஆா். பாட், திபான்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘ஒருவரை முட்டாள், திருடன் என எந்த இடத்திலும் திட்டினாலும் அது அவரை இழிவுபடுத்த உபயோகிக்கும் அவதூறு வாா்த்தைகளாகும்.
அதே அந்த வாா்த்தைகள் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிராக பயன்படுத்தினால், அதில் ஜாதியை குறிப்பிட்டு திட்டவில்லை என்றால் அது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாகாது.
இதுபோன்ற புகாா்களை பதியும்போதும் முதல்தகவல் அறிக்கையில் குற்றம் நடைபெற்ற விதத்தின் முழு விவரங்களை குறிப்பிடப்படிவில்லை என்றாலும், குற்றப்பத்திரிகையிலாவது அதை தெளிவாக பதிய வேண்டும். அப்போதுதான் அந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமா என முடிவு செய்ய இயலும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
மேலும், கழிவுநீா் வெளியேற்ற பிரச்னை மோதல் வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என கூறி, அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.