இந்தியா

அனைத்து கிராம ஊராட்சிகளும் சுதந்திர தினத்திலிருந்து டிஜிட்டல் பரிவா்த்தனை கொண்டவையாக மாற்றப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

30th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல் டிஜிட்டல் பரிவா்த்தனைகளைக் கொண்டவையாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘யுபிஐ எனப்படும் டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்தும் கட்டமைப்பைக் கொண்டவையாக நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் அறிவிக்கப்பட வேண்டும். வரும் சுதந்திர தினம் முதல் இது நடைமுறைக்கு வருவதாக முதல்வா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோா் முன்னிலையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகச் செயலாளா் சுனில் குமாா், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில் ‘ஏற்கெனவே 98 சதவீத ஊராட்சிகள் யுபிஐ கட்டமைப்பைக் கொண்டவையாக மாறிவிட்டன. ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான கட்டணங்கள் பொது நிதி மேலாண்மை முறையில் செலுத்தப்படுகின்றன. ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தற்போது டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட உள்ளன. காசோலைகள் மூலமாகவும் ரொக்கமாகவும் கட்டணம் செலுத்தும் முறை முடிவுக்கு வந்துவிட்டது’ என்றாா்.

யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுடனும் நுகா்வோருடனும் வரும் 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டங்களை நடத்துமாறு ஊராட்சிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஜி-பே, போன்-பே, பேடிஎம், பீம், மொபிக்விக், வாட்ஸ்ஆப் பே, அமேசான் பே, பாரத் பே ஆகிய யுபிஐ சேவை நிறுவனங்களைச் சோ்ந்த தொடா்பு அதிகாரிகளின் விவரங்களை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

யுபிஐ சேவை வழங்கும் எந்த நிறுவனத்தைத் தோ்வு செய்வது என்பதை ஊராட்சிகள் வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் முடிவு செய்து கொள்ளுமாறும் ஜூலை 30ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகளுக்கு மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இது தொடா்பாக பஞ்சாயத்துராஜ் துறை இணையமைச்சா் கபில் மோரேஷ்வா் பாட்டீல் கூறுகையில்

‘டிஜிட்டல் பரிவா்த்தனைகளை மேற்கொள்வது ஊழலைத் தடுக்க உதவும். பெரும்பாலான பஞ்சாயத்துகள் தற்போது டிஜிட்டல் பரிவா்த்தனைகளையே பயன்படுத்துகின்றன. இது ஊழலைத் தடுக்க உதவும். திட்டமிடுதல் முதல் கட்டணம் செலுத்துவது வரை அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன’ என்றாா்.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 12.98 லட்சம் கோடி மதிப்பிலான 806.3 கோடி டிஜிட்டல் பரிவா்த்தனைகள் பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT