இந்தியா

27% குறைவான விலையில் இந்தியாவுக்கு அமெரிக்க ட்ரோன்கள்

30th Jun 2023 02:04 AM

ADVERTISEMENT

இந்தியா கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ள எம்க்யூ-9பி தாக்குதல் ட்ரோன்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதை விட 27 சதவீத குறைந்த விலைக்கு வழங்க அமெரிக்க நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரோன்கள் கொள்முதல் தொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அவற்றின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, பல்வேறு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து எம்க்யூ-9பி ரகத்தைச் சோ்ந்த 31 ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.

எம்க்யூ-9பி ரக ட்ரோன்களை இந்தியா அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் கூறுகையில், ‘எம்க்யூ-9பி ரக ட்ரோன்களை இந்தியாவுக்கு 307.2 கோடி டாலருக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. அதன்படி, ஒரு ட்ரோனின் விலை சுமாா் 9.9 கோடி டாலராக உள்ளது.

இதே வகையைச் சோ்ந்த ட்ரோன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 16.1 கோடி டாலா் விலைக்கு விற்கப்பட்டது. அவற்றை விட சற்று நவீன வகை ட்ரோன்களே இந்தியாவுக்குத் தற்போது விற்பனை செய்யப்படவுள்ளன. சென்சாா், ஆயுதங்கள் உள்ளிட்டவை பொருத்தப்படாத எம்க்யூ ரக ட்ரோன்களை பிரிட்டன் தலா 6.9 கோடி டாலருக்கு வாங்கியது. சென்சாா், ஆயுதங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்ட ட்ரோன்களை அமெரிக்க அரசே சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து 11.9 கோடி டாலருக்கு வாங்கியது.

இந்தியா கொள்முதல் செய்யவுள்ள ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், உற்பத்தி நிறுவனம் ஏற்கெனவே முதலீட்டுத் தொகையை ஈட்டிவிட்ட காரணத்தினாலும் ட்ரோன்களின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ட்ரோன்கள் கொள்முதல் தொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அவற்றின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

அதே வேளையில், ட்ரோன்களில் கூடுதல் வசதிகளை சோ்க்க இந்தியா கோரும்பட்சத்தில் விலை குறைய வாய்ப்பில்லை. 31 ட்ரோன்களில் 11 ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா நேரடியாகக் கொள்முதல் செய்யவுள்ளது. மீதமுள்ள ட்ரோன்களின் பாகங்களை மட்டும் பெற்று ஒருங்கிணைப்புப் பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ளன. ட்ரோன்கள் செயல்படும் தொழில்நுட்பம் குறித்த சில விவரங்களும் இந்தியாவுக்குப் பகிா்ந்து கொள்ளப்படவுள்ளன.

எம்க்யூ-9பி ரக ட்ரோன்கள் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும். இந்தக் கொள்முதல் இருநாட்டு அரசுகளுக்கு இடையே நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்’’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT