இருதரப்பு முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு இந்தியா-பிலிப்பின்ஸ் முடிவு செய்துள்ளன.
பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சா் என்ரிக் மனலோ இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், இந்தியா-பிலிப்பின்ஸ் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 5-ஆவது கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பிலிப்பின்ஸ் அமைச்சா் மனலோ, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இருதரப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டம் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, வா்த்தகம், முதலீடு, சுகாதாரம், மருந்து உற்பத்தி, வேளாண்மை, நிதிநுட்பம், தகவல்-தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘பாதுகாப்புத் துறையில் நிலவும் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இருதரப்பும் உறுதி ஏற்றுள்ளன. பிலிப்பின்ஸின் பாதுகாப்புத் தளவாடங்கள் தேவையை ஈடுசெய்வதற்காகக் கடனுதவியை வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது.
கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான இருதரப்பு கூட்டு பயிற்சிகளை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் முதல் முறையாக 300 கோடி அமெரிக்க டாலா் மதிப்பைக் கடந்துள்ளதற்கு அமைச்சா்கள் இருவரும் வரவேற்பு தெரிவித்தனா். இருதரப்பு வா்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவும் கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைந்து சீா்திருத்தங்களைப் புகுத்தும் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் பிலிப்பின்ஸும் முடிவெடுத்துள்ளன. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தேவை குறித்தும் கூட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டது.
இருதரப்பு வா்த்தகம், முதலீடு, சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குற்றவியல் விவகாரங்கள் தொடா்பான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் குறித்தும், கைதிகளைப் பரஸ்பரம் பகிா்ந்து கொள்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் திகழ்வதை உறுதி செய்ய இருநாடுகளும் வலியுறுத்தின. பிரச்னைகளுக்கு சா்வதேச விதிகளின்படி பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும் என்றும் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுவடையும் நல்லுறவு:
தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பிலிப்பின்ஸ், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லைப் பிரச்னையிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. தென்சீனக் கடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை உரிமைகோருவது தொடா்பாக பிலிப்பின்ஸ்-சீனா இடையேயான வழக்கு ஐ.நா. மத்தியஸ்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் பிலிப்பின்ஸுக்கு ஆதரவாகக் கடந்த 2016-ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென பிலிப்பின்ஸ் கூறி வருகிறது. ஆனால், அத்தீா்ப்பை ஏற்க சீனா மறுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிலிப்பின்ஸ் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை 37.5 கோடி டாலா் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைக் கடந்த ஆண்டு ஜனவரியில் பிலிப்பின்ஸ் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.