இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.41 சதவீதமாக உள்ளது.
முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும்.
செவ்வாய்க்கிழமை நடந்த கடந்த வாரத்துக்கான ஏலத்தில், நாட்டின் 12 மாநிலங்கள் ரூ.22,500 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டன.
எனினும், கடன் பத்திரங்கள் மூலம் திரட்டவிருப்பதாக அந்த மாநிலங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த ரூ.23,600 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் குறைவாகும்.
கடந்த வார ஏலத்தில் மாநிலங்களின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதற்கு, அந்தப் பத்திரங்களின் சரசாரி பருவகாலம் 14 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக அதிகரித்ததே காரணம் என்று சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களைப் பொருத்தவரை, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அந்த வகைக் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 34 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.