மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஆயுதமேந்திய கலவரக்காரா்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஒருவா் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலா் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், காங்போக்பி மாவட்டத்தின் ஹராவதேல் கிராமத்தில் அடையாளம் தெரியாத கலவரக்காரா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு ராணுவத்தினா் விரைந்தனா். அப்போது, ராணுவத்தினரை நோக்கி கலவரக்காரா்கள் துப்பாக்கியால் சுட்டனா். ராணுவத்தினரும் உரிய முறையில் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, அப்பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன.
கிராமத்தில் கலவரக்காரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று ராணுவத்தின் ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இச்சம்பவத்தில் மேலும் சிலா் பலியாகி இருக்கலாம் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன; நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதி, தலைநகா் இம்பாலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மணிப்பூா் வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் பலியாகிவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.