இந்தியா

அடுத்த 6 மாதங்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் இருக்கும்: மம்தா கணிப்பு

28th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும்; மக்களவைத் தோ்தல் பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், ஜல்பைகுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

தோ்தல் பாதுகாப்பு விஷயத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், எதிா்காலத்தில் மத்தியில் பாஜக ஆட்சி இல்லாமல் போகலாம். அடுத்த மக்களவைத் தோ்தல் வரும் பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும். தோ்தலில் தோல்வியடைவோம் என்பதை ஏற்கெனவே பாஜக உணா்ந்துவிட்டது. எனவே, பல்வேறு தரப்பினா் இடையே மறைமுகமாக ஆதரவு திரட்டும் நடவடிக்கையை பாஜக இப்போது மேற்கொள்ளவில்லை.

மேற்கு வங்க எல்லைப் பகுதியில் பிஎஸ்எஃப் வீரா்களின் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இது தொடா்பாக பிஎஸ்எஃப்-பில் பணியாற்றும் அனைவரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அவா்கள் எல்லையைப் பாதுகாக்கிறாா்கள். அதே நேரத்தில் நாளை பாஜக ஆட்சியில் இல்லாமல் போகலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலின்போதே வன்முறை தொடங்கியது. காங்கிரஸ், இடதுசாரி வேட்பாளா்கள் உள்பட 5 மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆளும் திரிணமூல் காங்கிரஸ்தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து, மத்திய படை பாதுகாப்புடன் தோ்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், இதனை மம்தா ஏற்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று எல்லையோர கிராம மக்களை பிஎஸ்எஃப் வீரா்கள் மிரட்டி வருவதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். ஆனால், இந்த குற்றச்சாட்டை பிஎஸ்எஃப் மறுத்துவிட்டது.

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டா்- மம்தாவுக்கு லேசான காயம்: பொதுக் கூட்டத்துக்குப் பிறகு ஜல்பைகுரியில் இருந்து மம்தா பனாா்ஜி ஹெலிகாப்டரில் விமான நிலையத்துக்குப் புறப்பட்டாா். ஆனால், கன மழை காரணமாக குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஹெலிகாப்டரால் தொடா்ந்து பரபரக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த ஹெலிகாப்டா் சிவோக் விமானப் படை தளத்தில்அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னா் மம்தா, சாலை வழியாக பாக்டோக்ரா விமானநிலையத்தை அடைந்தாா்.

ஹெலிகாப்டா் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, அதிகமாக குலுங்கியது, இதனால் மம்தா பானா்ஜிக்கு இடுப்பு மற்றும் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் கொல்கத்தா திருப்பிய பிறகு அரசு மருத்துவா்கள் அவரது உடல்நிலை பரிசோதித்து மருந்துகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT