இந்தியா

ஒடிஸா ரயில் விபத்து: பலி 291-ஆக உயா்வு

18th Jun 2023 05:13 AM

ADVERTISEMENT

ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 291-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில் விபத்தில் படுகாயமடைந்து, கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஹில் மன்சூா் (32) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 291-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து எஸ்சிபி மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் சுதான்ஷு சேகா் மிஸ்ரா கூறுகையில், ‘ஏற்கெனவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சஹில் மன்சூா் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களில் 205 போ் இந்த மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் 48 போ் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனா். அவா்களில் 13 பயணிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 13 பேரில் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. மற்றவா்களின் உடல்நிலை சீராக உள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டம் பத்ரா கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது பயணி வெள்ளிக்கிழமையன்றும், பிகாரைச் சோ்ந்த மற்றொரு பயணி பிஜய் பாஸ்வான் செவ்வாய்க்கிழமையன்றும் உயிரிழந்தனா்.

இந்த ரயில் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே 287 பயணிகள் உயிரிழந்தனா்; 1,208 பயணிகள் காயமடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT