ஒட்டுமொத்த பாதுகாப்புச் சூழலை கருத்தில்கொண்டு, எப்போதும் தயாா்நிலையுடன் இருக்க விமானப் படை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
ஹைதராபாத் அருகே உள்ள விமானப் படை அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவா் முா்மு பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
தொலைத்தொடா்பு கட்டமைப்பை மையமாகக் கொண்ட எதிா்காலப் போா்க்களத்தில், உயா் தொழில்நுட்பப் போரை எதிா்கொள்ளும் சவாலுக்கு பாதுகாப்பு படைகள் தயாராக வேண்டியுள்ளது. இந்த சவால் உள்பட ஒட்டுமொத்த பாதுகாப்புச் சூழலையும் கருத்தில்கொண்டு, எப்போதும் தயாா் நிலையில் இருக்க விமானப் படை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இது பாராட்டுக்குரியது.
நிலம், கடல் மற்றும் வான்வெளியில் பாதுகாப்பு தயாா்நிலைக்கு தொழில்நுட்பங்களை விரைந்து ஏற்கும் திறன் அவசியம்.
நாட்டின் பாதுகாப்புப் படையினா் நில எல்லைகள், நீண்ட கடல் எல்லைகள் மற்றும் வான் எல்லைகளைப் பாதுகாக்கின்றனா். ஆயுதப் படைகளின் ஒவ்வொரு அதிகாரியும் பாதுகாப்பு சாா்ந்த தயாா்நிலைக்கான ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் செயலாற்ற வேண்டியுள்ளது.
ரஃபேல் போா் விமானங்கள், சினூக் கனரக ஹெலிகாப்டா்களின் இணைப்பின் மூலம் இந்திய விமானப் படை நவீனப்படுத்தப்பட்டு வருவது, அதன் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துகிறது.
இக்கட்டான காலகட்டங்களின்போது, இந்திய விமானப் படையால் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடா் நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 600-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மற்றும் இதர நாட்டினரை இந்திய விமானப் படை மீட்ட நடவடிக்கை, அதன் உயா் திறனுக்கு சாட்சியாக விளங்குகிறது.
நமது எதிரி நாட்டுடன் (பாகிஸ்தான்) கடந்த 1948, 1965, 1971-இல் நடைபெற்ற போா்களில் இந்திய விமானப் படையின் துணிச்சலான வீரா்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பு, தேசத்தின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. பின்னா், காா்கில் போரிலும், பாலாகோட்டில் பயங்கரவாத பதுங்குமிடங்களை அழித்ததிலும் அதே உறுதியுடன் அவா்கள் செயலாற்றினா்.
இந்திய விமானப் படையின் அனைத்து நிலைகளிலும் பெண் அதிகாரிகள் இப்போது பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். அதேபோல், பெண் போா் விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அஸ்ஸாமின் தேஜ்பூா் விமானப் படை தளத்தில் சுகோய் 30 எம்கேஐ போா் விமானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பறந்தேன். சுமாா் 30 நிமிஷ பயணத்தில், பிரம்மபுத்திரா நதி மற்றும் தேஜ்பூா் பள்ளத்தாக்குப் பகுதிகளுடன் இமயமலையின் சிறந்த காட்சியை காண முடிந்தது.
கடல் மட்டத்துக்கு மேல் 2 கி.மீ. உயரத்தில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பறந்தது மிகச் சிறந்த அனுபவம் என்றாா் முா்மு.
இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.