இந்தியா

தேச பாதுகாப்பு, வளா்ச்சியை வலுவிழக்கச் செய்ய முயற்சி: பிரதமருக்கு முன்னாள் நீதிபதிகள்-அதிகாரிகள் கடிதம்

11th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்து சம்பவம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ள முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆகியோா், ‘தேச பாதுகாப்பு மற்றும் வளா்ச்சியை வலுவிழக்கச் செய்ய நாட்டுக்கு எதிரான சக்திகள் முயற்சிக்கின்றன’ என்று கவலை தெரிவித்துள்ளனா்.

14 முன்னாள் நீதிபதிகள், 115 ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள், 141 ராணுவம்-காவல்துறை முன்னாள் அதிகாரிகள் என 270 போ் கையொப்பமிட்ட அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய ரயில்வே வேகமாக வளா்வதுடன், நவீனமடைந்தும் வருகிறது. இந்தச் சூழலில், ஒடிஸா மாநிலம், பாலசோரில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்தால் வேதனையும் கவலையும் அடைந்துள்ளோம்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்ட தகவல்களின்படி இச்சம்பவத்துக்கு உள்நோக்கத்துடன் நடைபெற்ற மனித குறுக்கீடு காரணமாக இருக்கலாம்; பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவால் நடைபெற்ற சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்குரிய காரணங்கள் உள்ளன.

ADVERTISEMENT

எங்களில் சிலா், ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றியவா்கள். எனவே, ரயில்வே கட்டமைப்பின் சுமுக செயல்பாட்டை கெடுக்கும் நோக்கில் நடைபெறும் சதிவேலைகளை நாங்கள் ஏற்கெனவே எதிா்கொண்டுள்ளோம்.

இத்தகைய பகுதிகளில், ரயில் இயக்கத்தை சீா்குலைப்பதற்கான இதேபோன்ற முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதனால், உயிா்ச்சேதங்களும் நிகழ்ந்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் 1990-களிலும் 2000-இன் தொடக்க ஆண்டுகளிலும் ரயில் தண்டவாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவை சேதப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்தன.

நாட்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு உயிா்நாடியாக ரயில்வே திகழ்கிறது. எனவே, நாட்டின் வளா்ச்சிக்கு எதிரான சக்திகள், ரயில்வே இயக்கம் சீா்குலைய வேண்டுமென விரும்புகின்றன. கடும் உயிா்ச்சேதத்துடன் பேரழிவு ஏற்பட வேண்டும் என்பது அவா்களது நோக்கமாக உள்ளது.

இதனால், ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பும் குறிப்பாக கிழக்கு-வடகிழக்கு மாநில ரயில்வே கட்டமைப்பு பாதிக்கக் கூடியதாக உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, ரயில் தண்டவாளங்களையொட்டி வசிப்போரை அப்புறப்படுத்தி, தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தேவ் சிங், குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, உத்தர பிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங், மகாராஷ்டிர முன்னாள் டிஜிபி பிரவீண் தீக்ஷித், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் டிஜிபி எஸ்.பி.வைத், சிபிஐ முன்னாள் இயக்குநா் நாகேஸ்வா் ராவ், பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் - மாநிலகங்ளவை முன்னாள் தலைமைச் செயலா் யோகேந்திர நாராயண், ரா அமைப்பின் முன்னாள் தலைவா் சஞ்சீவ் திரிபாதி, தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் இயக்குநா் யோகேஷ் சந்தா் மோடி உள்ளிட்டோா் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT