இந்தியா

நாடு முழுவதும் உள்ள 100% எம்பிபிஎஸ் இடங்களுக்கு பொதுக் கலந்தாய்வு: என்எம்சி அறிவிப்பு

11th Jun 2023 12:25 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பெற்றுள்ள 100 சதவீத இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (எம்பிபிஎஸ்) ஒரே பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தனது புதிய வழிகாட்டுதலில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) குறிப்பிட்டுள்ளது.

‘இளநிலை மருத்துவக் கல்வி ஒழுங்காற்றுதல்-2023’ அல்லது ‘ஜிஎம்இஆா்-23’ என்ற தலைப்பிலான இந்தப் புதிய வழிகாட்டுதலை கடந்த 2-ஆம் தேதி அரசிதழில் என்எம்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்பு சோ்க்கையில் நடைமுறையில் உள்ள வழிக்காட்டுதல் அல்லது என்எம்சி-யின் பிற வழிகாட்டுதல்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பெற்றிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் ஒரே பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும். இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் (யுஜிஎம்இபி) இதற்கான வழிகாட்டுதலை வெளியிடும். அந்த வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சாா்பில் பிரிவு 17-இன் கீழ் நியமனம் செய்யப்படும் அதிகாரி கலந்தாய்வை நடத்துவாா்.

எந்தவொரு மருத்துவக் கல்லூரியும் இந்த வழிகாட்டுதலை மீறி இளநிலை மருத்துவப் படிப்பிகளில் மாணவா் சோ்க்கையை நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என்று என்எம்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய நடைமுறை என்ன?

தற்போது, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலைப் படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது.

மாநில அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் எஞ்சிய 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT