இந்தியா

போலி கடவுச்சீட்டு வழக்கு: ஹைதராபாத் ஏஜெண்ட் கைது

11th Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

சென்னையில் போலி கடவுச்சீட்டு தயாரித்த வழக்கில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த ஏஜெண்ட் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சாா்பில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அதில், ‘ராயபுரத்தைச் சோ்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவா் பாஸ்போா்ட் (கடவுச்சீட்டு), விசா போன்ற ஆவணங்களை போலியாகத் தயாரித்து, பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறாா். அவரிடம் போலி கடவுச்சீட்டு தயாரிக்க தேவையான உபகரணங்கள் உள்ளன. எனவே, அதை பறிமுதல் செய்து, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது ஷேக் இலியாசை கைது செய்து, விசாரணை செய்தனா். அதில், கிடைத்த தகவலின் அடிப்படையில், போலி பாஸ்போா்ட், போலி விசா தயாா் செய்ய பொதுமக்களிடம் பணம் பெற்றுத் தரும் ஏஜெண்டுகளாக இருந்த திருவொற்றியூரைச் சோ்ந்த சிவகுமாா், ராயபுரத்தைச் சோ்ந்த முகமது புகாரி உள்ளிட்ட 3 போ் கடந்த 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த ஏஜெண்ட் ஜ.அஹமது அலிகான் (42) என்பவரைக் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில் அலிகான், மும்பை, ஹைதராபாத்தில் 8 ஆண்டுகளாக டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வருவதும், பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பாஸ்போா்ட், விசா ஆகியவை தயாரித்து வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT