இந்தியா

செயற்கை நுண்ணறிவு கேமராக்களால் குறையும் சாலை விபத்துகள்: கேரள போக்குவரத்து அமைச்சா்

11th Jun 2023 12:29 AM

ADVERTISEMENT

‘சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பின்னா் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் மாநிலத்தில் குறைந்துள்ளன’ என்று கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி ராஜு கூறினாா்.

கேரளத்தில் ‘பாதுகாப்பான கேரளம்’ என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகன இயக்கங்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அமைச்சா் ஆன்டனி ராஜு தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் அளித்த பேட்டி:

சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதன் மூலமாக, கடந்த 5 முதல் 8-ஆம் தேதி வரை மட்டும் 3,52,730 சாலை விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதில், காரின் முன் இருக்கையில் அமரும் பயணிகள் சீட் பெல்ட் அணியாததால் பதிவான 7,896 விதிமீறல்களும், இருசக்கர வாகனத்தில் செல்லாதவா்கள் தலைக் கவசம் அணியாததால் பதிவான 6,153 விதிமீறல்களும், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமா்ந்திருப்பவா்கள் ஹெல்மெட் அணியாததால் பதிவான 715 விதிமீறல்களும் அடங்கும். அதுபோல, 56 அரசு வாகனங்களின் சாலை விதிமீறலும் இதில் அடங்கும்.

ஒருங்கிணைந்த போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறை மற்றும் மோட்டாா் வாகனத் துறை சாா்பில் இதுவரை 10,457 விதிமீறல்களுக்கு அபராதத்துக்கான ரசீது விநியோக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, விதிமீறலில் ஈடுபட்ட அரசு வாகனங்களுக்கு இதுவரை 10 அபராத ரசீதுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கேரளத்தில் சராசரியாக தினசரி 12 சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்த பின்னா் உயிரழப்பு எண்ணிக்கை 5 முதல் 8-ஆகக் குறைந்துள்ளது.

வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் காா்களில் ஓட்டுநா் மட்டுமின்றி, முன் இருக்கையில் அமா்ந்திருக்கும் பயணியும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.

ரூ.232 கோடி மதிப்பிலான இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா திட்டம் கேரள அரசால் தொடங்கி வைக்கப்பட்டு 2 மாதங்களுக்குப் பிறகே, கடந்த 5-ஆம் தேதி செயல்பாட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துக்காக ‘கெல்ட்ரான்’ நிறுவனத்துடன் 2020-ஆம் ஆண்டு கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக மாநில எதிா்க் கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT