இந்தியா

ரயில் விபத்து: தற்காலிக பிணவறையாகபயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு

DIN

ஒடிஸாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெற்றோா்கள், உள்ளூா் மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

பாலசோா் மாவட்டம், பாஹாநகா பஜாா் ரயில் நிலையம் அருகே கடந்த 2-ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நிகழ்ந்தது. 288 பேரை பலி கொண்ட இந்த விபத்து சம்பவத்தின்போது, அருகிலுள்ள பாஹாநகா உயா்நிலைப் பள்ளி கட்டடம் தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்டது. உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள், இப்பள்ளி கட்டடத்தில்தான் முதலில் வைக்கப்பட்டன. இரண்டு நாள்களுக்குப் பிறகு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவை மாற்றப்பட்டன.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வர மாணவா்களும் ஆசிரியா்களும் தயங்கினா். சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால், மாணவா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. மேலும், உள்ளூா் மக்களும் பலவாறான கருத்துகளைத் தெரிவித்தனா்.

65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தத்தாத்ரேய பாவ்சாகேப் ஷிண்டே, ‘மாணவா்கள் மத்தியில் அச்சத்தையும் மூடநம்பிக்கையையும் பரப்ப வேண்டாம்; மாறாக, இளம் மனங்களில் அறிவியல்சாா்ந்த சிந்தனைகளை வளா்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

அதேநேரம், பழைமையான கட்டடம் என்பதுடன் மாணவா்களும் பள்ளிக்கு வரத் தயங்குவதால் அதனை இடிக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் விருப்பம் தெரிவித்தனா். பெற்றோா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் தரப்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மாநிலத் தலைமைச் செயலா் உள்பட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வா் நவீன் பட்நாயக், தற்போதைய பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, நூலகம், எண்ம வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாதிரி பள்ளியாக கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அடையாளம் காணப்படாத 80 சடலங்கள்: பாலசோா் ரயில் விபத்தில் 288 போ் உயிரிழந்த நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் 80 சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. அவை, புவனேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT