இந்தியா

பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசிக்க வாய்ப்பு

DIN

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவரிடம், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசின் செயல்திட்டத்தில் உள்ளதா என்ற கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து, ஹா்தீப் சிங் புரி கூறியதாவது:

கடந்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் திருப்திகரமாக செயல்பட்டுள்ளன. தங்களது இழப்பில் சிலவற்றை அந்நிறுவனங்கள் மீட்டுள்ளன. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து நிலையாக இருந்து, அடுத்த காலாண்டும் சாதகமாக அமையும்பட்சத்தில் எரிபொருள் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசிக்கலாம்.

கடந்த ஏப்ரல் 22-க்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயா்த்தப்படவில்லை. நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமா் மோடி அரசு தொடா்ந்து உறுதி செய்யும்.

அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. இதன்மூலம், இலவச அரசியல் என்ற ஆபத்தான எல்லைக்குள் அவா்கள் நுழைகிறாா்கள்.

பெட்ரோல்-டீசல் விலை விவகாரத்தை பெரிதாக எழுப்பும் எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்கள், அவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பதில்லை. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களைவிட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.

நமது அண்டை நாடுகள் (பாகிஸ்தான், இலங்கை) மின் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமா் மோடி அரசின் கொள்கைகளால், இந்தியாவில் சீரான மின் விநியோகமும், குறைவான கட்டணமும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், பசுமை எரிசக்தியும் ஊக்குவிக்கப்படுகிறது.

நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்புத் திறனை, தற்போதுள்ள 252 மில்லியன் மெட்ரிக் டன் என்பதில் இருந்து 400-450 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிப்பதை நோக்கி அரசு செயலாற்றி வருகிறது என்றாா்.

‘இந்தியா என்ற காரை பின்புற கண்ணாடியை பாா்த்து மட்டுமே மோடி அரசு இயக்குகிறது’ என்ற ராகுலின் விமா்சனம் குறித்து அமைச்சா் புரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், இப்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒவ்வொரு விவகாரத்திலும் பிரதமா் மோடி முன்னணியில் நின்று வழிநடத்துவதால், கொள்கை, நோக்கம், தலைமைத்துவம் நிறைந்ததாக மத்திய அரசு விளங்குகிறது. இவையெல்லாம், ராகுலின் கண்களுக்கு தெரிவதில்லை. அவரது பாா்வை பரிசோதிக்கப்பட வேண்டும்’ என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

SCROLL FOR NEXT