இந்தியா

பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம்: சாக்ஷி மாலிக்

10th Jun 2023 04:32 PM

ADVERTISEMENT

பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தப் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்தால்தான் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அன்றாடம் என்னவெல்லாம் அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், சத்யவா்த் காடியான், பஜ்ரங் புனியா, ஜிதேந்தா் கின்ஹா உள்ளிட்ட மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புதிய நாடாளுமன்றம் முன்பாக அவா்கள் மகா பஞ்சாயத்து கூட்டத்தை நடத்த திட்டமிட்டனா். இதையொட்டி கடந்த மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் சென்றபோது அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். 

ADVERTISEMENT

எனினும் சட்டம்- ஒழுங்கை மீறியதாக அவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. அவா்கள் ஜந்தா் மந்தரில் போராட்டத்தைத் தொடரவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, சத்யவா்த் காடியான், ஜிதேந்தா் கின்ஹா ஆகியோா் புதன்கிழமை சந்தித்தனா். 

இந்தச் சந்திப்பு 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சாக்ஷி மாலிக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடா்பாக ஜூன் 15-க்குள் காவல் துறை விசாரணையை நிறைவு செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதுவரை எங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜூன் 15 வரை எங்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தாா். முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து மல்யுத்த வீரா், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 15-க்குள் குற்றப்பத்திரிகை?: பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் உடனான சந்திப்புக்குப் பிறகு அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிஜ் பூஷணுக்கு எதிரான வழக்கில் ஜூன் 15-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், ஜூன் 30-க்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தலை நடத்த வேண்டும்; மல்யுத்த சம்மேளனத்தில் பெண் ஒருவா் தலைமையில் உள்புகாா்கள் குழு அமைக்க வேண்டும் என்று பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.

அவா்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT