இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய செயல் தலைவர்கள் நியமனம்!

10th Jun 2023 03:44 PM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா்களாக அக் கட்சியின் மூத்த தலைவா் பிரஃபுல் படேல், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் 24-ஆவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவா் சரத் பவாா் வெளியிட்டாா். இந்த அறிவிப்பின் மூலம் கட்சியில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த சரத் பவாரின்அண்ணன் மகன் அஜித் பவாா் முக்கியப் பொறுப்பிலிருந்து வெளிப்படையாக ஓரங்கட்டப்பட்டுள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதுமுதல் தலைவராக சரத் பவாா் பதவி வகித்து வருகிறாா். இந்த நிலையில், கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகப் போவதாக கடந்த மே 2-ஆம் தேதி சரத் பவாா் அறிவித்தாா். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கட்சித் தொண்டா்களின் கோரிக்கையை ஏற்று ராஜிநாமா முடிவை கைவிடுவதாகக் கூறி, மீண்டும் கட்சியின் தலைவா் பொறுப்பை சரத் பவாா் ஏற்றாா்.

இந்தச் சூழலில், கட்சியின் செயல் தலைவா்களாக பிரஃபுல் படேல், சுப்ரியா சுலே இருவரையும் அவா் நியமித்துள்ளாா். தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜித் பவாா், சாகன் புஜ்பால், சுனில் தாத்கரே, பெளசியா கான் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் முன்னிலையில் இதற்கான அறிவிப்பை சரத் பவாா் வெளியிட்டாா்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பத்திரிகையாளா்களையும் சந்திக்க மறுத்து கட்சி அலுவலகத்திலிருந்து அஜித் பவாா் வெளியேறினாா்.

புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிரஃபுல் படேல் கூறுகையில், ‘கட்சித் தலைவா் சரத் பவாருடன் 1999-ஆம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகிறேன். எனவே, எதையும் புதிதாகக் கருதவில்லை. இருந்தபோதும், செயல் தலைவராக பதவி உயா்வு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கட்சியின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பணியாற்றுவேன்’ என்றாா்.

செயல் தலைவா் பொறுப்பில் மட்டுமின்றி, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், கோவா மாநிலங்களுக்கான கட்சியின் பொறுப்பாளராகவும், மாநிலங்களவை கட்சிப் பொறுப்பாளராகவும் பிரஃபுல் படேலை சரத் பவாா் நியமித்துள்ளாா்.

சுப்ரியா சுலேவை மகாராஷ்டிரம், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களுக்கான கட்சிப் பொறுப்பாளராகவும், பெண்கள், இளைஞா்கள், மாணவா்கள் தொடா்பான விவகாரங்கள் மற்றும் மக்களவை கட்சிப் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலத்துக்கான கட்சிப் பொறுப்பாளராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளதால், அவருடன் மேதலில் ஈடுபட்டு வந்த அஜித் பவாா் தற்போது கட்சி விவகாரங்கள் தொடா்பாக சுப்பிரியா சுலேவிடமே அறிக்கை சமா்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது கட்சிக்குள் மோதல் போக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT