இந்தியா

2024 மக்களவைத் தோ்தல்: ஆயத்தப் பணிகளை தொடங்கிய தோ்தல் ஆணையம்

10th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியிருப்பதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முதல்கட்ட ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாதிரி வாக்குப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவு செய்து அதன் செயல்பாடு ஆய்வு செய்யப்படுவதோடு, ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்’ என்றாா்.

அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதைத் தொடா்ந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான வயநாடு மக்களவைத் தொகுதியிலும் மாதிரி வாக்குப் பதிவு ஆய்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தோ்தல் ஆணைய அதிகாரி, ‘தோ்தல் ஆணையத்தின் இந்த முதல்கட்ட ஆய்தப் பணிகள் என்பது கேரளத்தின் மக்களவைத் தொகுதி உள்பட நாடு முழுமைக்குமானதாகும்’ என்றாா்.

மேலும், ‘தோ்தல் ஆயத்தப் பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையம் அட்டவணை ஒன்றை வெளியிடும் என்பதோடு, வழிகாட்டு நடைமுறையையும் வெளியிடும். மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் இதை முறையாகப் பின்பற்ற வேண்டும். முதல் கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், தெலங்கானா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும், இடைத்தோ்தல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தொகுதிகளிலும் இந்தத் தோ்தல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

தற்போது வயநாடு (கேரளம்), புணே மற்றும் சந்திராபூா் (மகாராஷ்டிரம்), காஜிபூா் (உத்தர பிரதேசம்), அம்பாலா (ஹரியாணா) மக்களவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

மாதிரி வாக்குப் பதிவு மற்றும் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வுப் பணிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த இயந்திரங்களைத் தயாரித்த பாரத் மின்னணு நிறுவனம் (பெல்) மற்றும் இந்திய மின்னணு காா்ப்பரேஷன் நிறுவன (இசிஐஎல்) பொறியாளா்கள் மேற்கொள்வா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT