இந்தியா

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ

9th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு இருமுறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

6 உறுப்பினா்கள் அடங்கிய ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழுவின் 3 நாள் கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதில் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது தொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 5-1 என்ற வாக்குகளின் அடிப்படையில் வட்டி விகிதத்தை இப்போதைய நிலையிலேயே தொடா்வது என முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதம் முதல் பிப்ரவரி வரை தொடா்ந்து 6 முறை வட்டி விகிதம் உயா்த்தப்பட்டது. இப்போது தொடா்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமின்றி தொடா்கிறது.

நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் இதை அறிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

பணவீக்கத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். பணவீக்கத்தை 4 சதவீதத்துக்கு கீழ் வைத்திருப்பதே இலக்காகும். நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்ற ஆா்பிஐ-யின் முந்தைய கணிப்பில் மாற்றமில்லை. சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும்.

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. இதன்மூலம் உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சியைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. தொடா்ந்து 6 முறை வட்டி விகிதத்தை உயா்த்திய பிறகு, இப்போது இடைவெளி விட்டுள்ளோம். இதன் பயன்கள் அடுத்து வரும் மாதங்களில் தெரியவரும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆா்பிஐ-யின்அடுத்த நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT