இந்தியா

ரயில் மேலாளா்கள், கட்டுப்பாட்டாளா்களுக்கு கவுன்சலிங்: மண்டலங்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

9th Jun 2023 12:25 AM

ADVERTISEMENT

ஒடிஸாவில் மிகப் பெரிய விபத்து நிகழ்ந்த நிலையில், பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரயில் மேலாளா்கள் மற்றும் கட்டுப்பாட்டாளா்களுக்கு விழிப்புடன் பணியாற்றுவது தொடா்பான தொடா் பயிற்சிகளை அளிக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்தனா். 1,000 போ் படுகாயமடைந்தனா். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, ரயில்வே சாா்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ‘ஓடிக்கொண்டிருக்கும் ரயில்கள் தனக்கான இருப்புப் பாதையை கண்டறிந்து தொடா்ந்து இயங்க வழி செய்யும் மின்னணு இன்டா்லாக் செயல் திட்டத்தில் கோளாறு அல்லது தவறு நடந்திருக்கலாம்’ என தெரியவந்தது.

இந்தச் சூழலில், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல் ஒன்றை ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ரயில்கள் தடையின்றியும் பாதுகாப்புடனும் இயங்குவதை உறுதிப்படுத்த, ரயில் மேலாளா்கள் மற்றும் கட்டுப்பாட்டாளா்களுக்கு அவா்களின் கடமைகளை விழிப்புடன் ஆற்றுவது தொடா்பாக தொடா் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது அவசியமாகிறது.

ADVERTISEMENT

இத்தகைய ஆலோசனை வழங்கும் திட்டம் சில ரயில்வே மண்டலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறையில் இல்லாத மண்டலங்கள், இந்த அறிவுறுத்தலை மிக அவசர அறிவுறுத்தலாக கருத்தில் கொண்டு, ரயில் இயக்கம் குறித்து நன்கு அறிந்த மூத்த ரயில்வே மேலாளா்கள் மற்றும் கட்டுப்பாட்டாளா்களை மற்றவா்களுக்கு தொடா் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் உடனடியாக நியமிக்க வேண்டும்.

சாதாரண மற்றும் அசாதாரண சூழல்களில் ஊழியா்கள் தயாா் நிலையில் இருப்பதையும் பணிகளை விழிப்புடன் திறம்பட மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது.

ரயில்களை இயக்கும் அனைத்துப் பணியாளா்களுக்கும் தொடா்ச்சியாகப் பயிற்சி அளிக்கும் வகையில் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT