இந்தியா

மணிப்பூா்: கிராம மக்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

9th Jun 2023 10:56 PM

ADVERTISEMENT

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள், கிராம மக்கள் 3 பேரை சுட்டுக் கொன்றனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடா்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

காங்போகி - மேற்கு இம்பால் மாவட்ட எல்லையில் உள்ள கோகென் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினா் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள், சோதனை நடவடிக்கை என்று கூறி, வீட்டில் இருந்தவா்களை வெளியே அழைத்துள்ளனா். அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்தவா்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 3 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினா், துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டு விரைந்து வந்தனா். அவா்கள் வருவதற்குள் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனா். தீவிரவாதிகள் மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

முன்னதாக, மணிப்பூரில் 2 நாள்களாக எந்த வன்முறையும் நிகழவில்லை என்று மாநில அரசுக்கான பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா். இந்தச் சூழலில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து கோரும் பெரும்பான்மையினரான மைதேயி சமூகத்தினருக்கும் சிறுபான்மையாக உள்ள நாகா மற்றும் குகி பழங்குடியினருக்கும் கடந்த மாதத் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.

கலவரம் மற்றும் அதைத் தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் சுமாா் 100 போ் வரை உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.

விசாரணையை ஏற்றது சிபிஐ:

மணிப்பூா் கலவரம் தொடா்புடைய 6 வழக்குகளின் விசாரணையை சிபிஐ வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டது. இவ்வழக்குகளை விசாரிக்க டிஐஜி அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு அண்மையில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில ஆளுநா் அனுசுயா உய்கே தலைமையில் பல்வேறு தரப்பினா் அடங்கிய அமைதிக் குழு அமைக்கப்படும்; வன்முறைகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். கலவரத்தின் பின்னணியில் உள்ள குற்றச்சதி தொடா்பான 6 வழக்குகள், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று அறிவித்திருந்தாா்.

அதன்படி, அந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாநில அரசு மாற்றியது. அதையேற்றுக் கொண்ட சிபிஐ, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT