கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் பருவமழை ஒரு வார காலம் தாமதமாகத் தொடங்கியுள்ளது. தாமதமாக மழை தொடங்கினாலும் இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி வழக்கம்போல் தொடங்கிவிட்டது. மழையானது படிப்படியாக நகர்ந்து காற்று திசை வேகத்தின்படி கேரளத்தில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியுள்ளது.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!
தற்போது மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதற்கு அறிகுறியாகும். இந்நிலையில், கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.