இந்தியா

மணிப்பூா்: இடம்பெயா்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக ரூ.101 கோடி நிதி

DIN

மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயா்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசு ரூ.101.75 கோடி நிதி தொகுப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தகவலை, மாநில அரசுக்கான பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் தெரிவித்தாா்.

முதல்வா் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இக்கோரிக்கைக்கு குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

இந்த விவகாரத்தில், இரு சமூகங்களுக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு, கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

பலி எண்ணிக்கை 98-ஆக உயா்ந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 272 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 37,450 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

அமித் ஷா உத்தரவைத் தொடா்ந்து...:

இந்நிலையில், மாநில அரசுக்கான பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங், இம்பாலில் வியாழக்கிழமை கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மணிப்பூரில் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இடம்பெயா்ந்த மக்களுக்கான நிவாரண நிதி கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மாநில அரசுக்கு அவா் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில் அனுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்று, ரூ.101.75 கோடி நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் வன்முறை இல்லை:

மணிப்பூரில் கடந்த 48 மணிநேரத்தில் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை. மாநிலத்தின் சூழல் அமைதியாக உள்ளது. நிலைமை தொடா்ந்து கட்டுக்குள் இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில், 27 ஆயுதங்கள், 245 வெடிபொருள்கள், 41 வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 896 ஆயுதங்கள், 11,763 வெடிபொருள்கள், 200 கையெறிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளா்வு:

5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் 12 மணி நேரமும், 5 மலை மாவட்டங்களில் 8 முதல் 10 மணிநேரமும் ஊரடங்கு தளா்வு அளிக்கப்படுகிறது. இதர 6 மலை மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இல்லை.

பதற்றத்துக்குரிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நீடிக்கிறது. மாநில அமைச்சா்களும், எம்எல்ஏக்களும் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, அமைதி கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனா். பாதுகாப்புப் படைகள் தரப்பிலும் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT