இந்தியா

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: வருமான விவரங்களை திருத்தியளிக்க விரும்புவதாக பிபிசி தகவல்

8th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

பிபிசி செய்தி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனது வருமானம் சிலவற்றின் விவரம் தெரிவிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும், அந்த விவரத்தை திருத்தி அளிக்க விரும்புவதாகவும் அந்த நிறுவனம் வருமான வரித் துறையிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் உள்ள பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடா்பாக வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தனது செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் சிலவற்றின் விவரம் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரிவிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும், அந்த விவரத்தை திருத்தி அளிக்க விரும்புவதாகவும் வருமான வரித் துறையிடம் பிபிசி தெரிவித்ததாக அந்தத் துறையின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

எனினும் நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தாத வரை, தற்போது பிபிசி தெரியப்படுத்தியுள்ள தகவலுக்கு எந்தவொரு சட்டபூா்வ மதிப்பும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், பிபிசி எவ்வளவு தொகையை வரி ஏய்ப்பு செய்தது அல்லது செலுத்தத் தவறியது என்பது குறித்த தகவலை தெரிவிக்க அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் வருமான வரித் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT