இந்தியா

நவி மும்பையில் திருப்பதி கோயில் கட்டும் பணி: பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார் மகாராஷ்டிர முதல்வர்

8th Jun 2023 02:50 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில் நவி மும்பையில் திருப்பதி கோயில் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தார்.
 நவி மும்பையில் உள்ள உல்வே பகுதியில் திருப்பதி கோயில் கட்டுவதற்குத் தேவையான 10 ஏக்கர் நிலத்தை கோயில் அறக்கட்டளைக்கு மகாராஷ்டிர அரசு கொடுத்திருந்த நிலையில் அங்கு கோயில் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது.
 இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது:
 இக்கோயில் ரூ. 70 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இதற்கான செலவை ரேமண்ட் நிறுவனத் தலைவர் சிங்கானியா ஏற்றுள்ளார். கோயில் கட்டுமானப் பணி இரண்டு வருடங்களில் முடிவுறும்.
 மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் திருமலையில் உள்ளதுபோல கோயிலை தங்கள் மாநிலங்களில் எழுப்புமாறு கோரியிருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது நவிமும்பையில் கோயில் கட்டும் பணித் தொடங்கியுள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில் முதல்வர் ஷிண்டே பேசுகையில், "பல்வேறு காரணங்களால் திருமலைக்குச் செல்ல முடியாத பல ஆயிரம் பக்தர்களின் விருப்பத்தை இக்கோயில் நிறைவேற்றும். கோயில் கட்டுமானப் பணிக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மகாராஷ்டிர அரசு வழங்கும். துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் இதற்காக மத்திய அரசிடம் இருந்து சில உதவிகளைப் பெற்றுக் கொடுத்தார். அனைத்து பிரச்னைகளும் அகற்றப்பட்டு இன்று கோயில் கட்டுமானப் பணித் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
 ரேமண்ட் நிறுவனத் தலைவர் சிங்கானியா கூறுகையில், "திருமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இனிமேல் இக்கோயிலுக்கு வந்து ஸ்ரீவெங்கடேஸ்வரனைத் தரிசிக்கலாம். அத்துடன் இதன்மூலம் நவி மும்பையில் பொருளாதாரம் மேம்படும்' என்றார்.
 இந்த நிகழ்ச்சியில் ரேமண்ட் நிறுவன தலைவரும் மேலாண் இயக்குநருமான கெளதம் சிங்கானியா, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT