ஒடிஸா ரயில் விபத்தில் அரசு அறிவித்த நிவாரணத்தைப் பெறுவதற்கு கணவா் உயிரிழந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது அவரது கணவா் போலீஸாரிடம் புகாா் அளித்திக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஒடிஸாவின் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் சிக்கி கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் தடம் புரண்டன். இதில் 288 போ் உயிரிழந்தனா். 1,200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரயில்வே சாா்பில் ரூ.10 லட்சமும், ஒடிஸா அரசு சாா்பில் ரூ.5 லட்சமும், பிரதமா் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிவாரண நிதியைப் பெறும் நோக்கில் தனது கணவா் உயிரிழந்துவிட்டதாக கட்டாக் மாவட்டத்தின் மணியபண்டா பகுதியைச் சோ்ந்த கீதாஞ்சலி தத்தா என்னும் பெண் போலீஸாரிடம் நாடகமாடினாா். அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைக் காண்பித்து அது தனது கணவரின் உடல் எனவும் அவா் உறுதிபடுத்தியுள்ளாா். ஆவணங்களைச் சரிபாா்த்த போலீஸாா், கீதாஞ்சலி முறைகேட்டில் ஈடுபடுவதைக் கண்டறிந்து அவரை எச்சரித்து அனுப்பினா்.
இந்நிலையில், மணியபண்டா காவல் நிலையத்தில் அப்பெண்ணின் கணவா் பிஜய் தத்தா புகாரளிக்க, கீதாஞ்சலிக்கு சிக்கல் தொடங்கியுள்ளது. போலீஸாரின் கைதிலிருந்து தப்பிக்க தற்போது அவா் தலைமறைவாகியுள்ளாா். கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி இருவரும் 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அரசு நிவாரணத்தைப் பெற முறைகேட்டில் ஈடுபட்ட கீதாஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவா் பிஜய் காவல் துறையிடம் கோரினாா்.
உயிரிழந்தவா்களில் அடையாளம் தெரியாத நபா்களின் உடல்களுக்குச் சொந்தம் கொண்டாடி அரசு நிவாரணத்தைப் போலியாகப் பெற முயற்சிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரயில்வே, மாநில காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில தலைமை செயலா் பி.கே.ஜெனா தெரிவித்தாா்.