இந்தியா

தில்லி அவசரச் சட்டம்: முதல்வர் கேஜரிவாலுக்கு அகிலேஷ் ஆதரவு

8th Jun 2023 02:48 AM

ADVERTISEMENT

தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாறுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக முதல்வரும், ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சமாஜவாதி கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார்.
 முதல்வர் கேஜரிவால் லக்னெளவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அரவிந்த் கேஜரிவால், "தலைநகரில் அதிகாரிகளின் சேவைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து நானும் பகவந்த் மானும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் விவாதித்தோம். அப்போது அந்த மசோதாவை மாநிலங்களவையில் கொண்டுவரும்போது அதை எதிர்க்க எங்களுக்கு ஆதரவு தருவதாக அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார்.
 பாஜக பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் அந்தக் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடிக்க வேண்டும். இது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான ஒரு அரையிறுதி ஆட்டமாகவே இருக்கும். அத்துடன் நாட்டு மக்களுக்கும் ஒரு உறுதியான தகவலைத் தெரிவிப்பது போலாகும் என்றார்.
 அகிலேஷ் யாதவ் கூறுகையில், "மத்திய அரசின் அவசர சட்ட மசோதா ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனது கட்சி அரவிந்த் கேஜரிவாலுடன் இருக்கும்' என்றார்.
 மத்திய அரசின் இந்த அவசரச் சட்ட மசோதாவுக்கு எதிராக ஆதரவு கோரி அனைத்து எதிர்க்கட்சிகளையும் அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வருகிறார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சிவசேனை (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இதுவரை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
 பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அரவிந்த் கேஜரிவாலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
 தில்லியில் காவல் துறை, சட்டம் ஒழுங்கு, நிலம் ஆகியவற்றை தவிர மற்ற அதிகாரங்களை தில்லி அரசிடம் வழங்கி மே 11-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுவரை இந்த அதிகாரம் துணைநிலை ஆளுநர் வசம் இருந்தது.
 இதையடுத்து. தில்லியில் குரூப் ஏ அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யவும், பணியமர்த்தவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்தில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT