இந்தியா

 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள்: பிரதமர் மோடி பாராட்டு

8th Jun 2023 01:36 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாடு முழுவதும் 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதித்து மத்திய அரசு புதன்கிழமை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவால் மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட கிராமங்களில் கிடைத்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரம், உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
 இந்த முடிவு குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
 மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட நாடு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். மத்திய கூட்டுறவுத் துறையின் இந்த முக்கிய முயற்சி கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என அதில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 சாதாரண நோய்கள் முதல் நாள்பட்ட நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகளை, பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு பிஎம்பிஜேபி திட்டத்தைக் கொண்டுவந்தது. சுமார் 1,800 மருந்துகள், 285 மருத்துவ சாதனங்கள் இந்த மருந்தகங்களில் 50 முதல் 90 சதவீதம் வரை மலிவான விலையில் விற்கப்படுகின்றன.
 தற்போது நாடு முழுக்க 9,303 பிஎம்பிஜேபி மருந்தகங்கள் நகர்ப்புறங்களில் செயல்படுகின்றன. இவற்றை கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்த மத்திய மத்திய கூட்டுறவுத் துறையும் மத்திய மருந்தக துறையும் இணைந்து முடிவு எடுத்துள்ளன.
 இதன்படி, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் முதல்கட்டமாக 1,000 பிஎம்பிஜேபி மருந்தகங்களும், பின்னர் டிசம்பர் மாதத்துக்குள் எஞ்சிய மேலும் 1000 பிஎம்பிஜேபி மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா கூட்டாக அறிவித்துள்ளனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT