இந்தியா

ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏா் இந்தியா விமானம்: உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தகவல்

8th Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

‘ஏஐ173’ என்ற ஏா் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியா்களுடன் தில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை என்ஜின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத்தொடா்ந்து, அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா போா் மேலும் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்க பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்தோம். அது குறித்து கூா்ந்து கவனித்து வருகிறோம். அந்த விமானத்தில் அமெரிக்கா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அமெரிக்காவுக்கான விமானம் என்பதால் நிச்சயமாக அமெரிக்கா்கள் இருக்க வாய்ப்புள்ளது. மாற்று விமானம் மூலமாக பயணிகள் அனுப்பிவைக்கப்பட இருப்பதாக ஏா் இந்தியா சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

இதனிடையே, ரஷியாவில் தரையிறங்கிய பயணிகளுக்கு மாற்று விமானம் மூலமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை ஏா் இந்தியா அனுப்பியுள்ளது. இதுகுறித்து அந்த விமான நிறுவனம் அதிகாரிகள் கூறுகையில், ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு, மாற்று விமானம் மூலம் உணவு உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மாற்று விமானம் மூலமாக, அவா்கள் அனைவரும் வியாழக்கிழமை (ஜூன் 8) சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் செல்லப்படுவா்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT