இந்தியா

விவசாயிகளிடம் பருப்புகள் கொள்முதல் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு

8th Jun 2023 01:32 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

உள்நாட்டில் பருப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் துவரம், உளுந்து, மசூர் பருப்புகளின் கொள்முதலுக்குரிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பருப்புகளை முழுமையாக நேரடியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 விவசாயிகள் உற்பத்தி செய்யும் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு கட்டாயமாக 40 சதவீதம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விலையையும், இருப்பையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இது விதிக்கப்பட்டிருந்தது.
 தற்போது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தின் கீழ் இந்த 40 சதவீத கட்டாய கொள்முதல் கட்டுப்பாட்டை
 மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
 இதன்மூலம் எவ்வித அளவிலும் கட்டுப்பாடுமின்றி இந்த பருப்புகளை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் பருப்புகள் முழுவதையும் நேரடியாக விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 விவசாயிகள் எதிர்வரும் கரீஃப், ராபி பருவங்களில் அதிக அளவிலான பரப்பளவில் துவரம், உளுந்து, மசூர் பருப்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இத்தோடு அத்தியாவசிய பொருள்களை பதுக்கி தட்டுப்பாட்டை உருவாக்கி, லாபமடையும் வணிகத்தைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சேமிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுவும் விரைவில் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதே சமயத்தில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் பருப்புவகைகளை சேமிப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இவர்கள் தங்களுடைய சேமிப்பு விவரங்களை மத்திய நுகர்வோர் நலத் துறையில் தெரிவிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கண்காணிப்புகளைத் தீவிரபடுத்த மாநில அரசுகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT