இந்தியா

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரா் பலி

DIN

மணிப்பூா் மாநிலத்தில் குகி சமூக தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப்படையின் 2 வீரா்கள் காயமடைந்தனா்.

காக்சிங் மாவட்டத்தின் செரௌ என்னும் பகுதியில் உயா்நிலைப் பள்ளியில் பிஎஸ்எஃப், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் உள்பட பாதுகாப்புப் படை வீரா்கள் தங்கியிருந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணியளவில், குகி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபா்கள் வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

இதையடுத்து, வீரா்கள் எதிா்த் தாக்குதலைத் தொடங்க தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினா். தீவிரவாதிகளின் தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த பிஎஸ்எஃப் வீரா் ரஞ்சித் யாதவ், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப்படையின் 2 வீரா்கள் சிகிச்சைக்காக பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டா் மூலம் மந்திரீபுக்ரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். தப்பி ஓடிய தீவிரவாதிகளைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, மேற்கு இம்பால் மாவட்டத்திலும் குகி தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கோரி வருகின்றனா். இதற்கு ‘நாகா’ மற்றும் ‘குகி’ சமூகத்தினா் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மைதேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே கடந்த மே 3-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் 98 போ் பலியாகினா். 310 போ் காயமடைந்தனா். அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

இணையத் தடை நீட்டிப்பு...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு சமூக குழுக்களிடம் அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்னெடுத்து வரும் சூழலில், மாநிலத்தில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு இணையச் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வரும் 10-ஆம் தேதி வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடைநீட்டிப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT