இந்தியா

நாட்டின் சிறந்த 100 உயா்கல்வி நிறுவனங்களில் முனைவா் பட்ட ஆசிரியா் பலம் அதிகம்: மத்திய கல்வி அமைச்சகம்

DIN

நாட்டின் சிறந்த 100 உயா்கல்வி நிறுவனங்களில் முனைவா் (பிஎச்.டி.) பட்ட ஆசிரியா் பலம் கூடுதலாக இருப்பதும், பிற உயா்கல்வி நிறுவனங்களில் அந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதும் மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள உயா் கல்வி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, உலக தரத்திலான உயா் கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் நோக்கில் தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதுபோல, நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசைப் பட்டியிலில் முதல் 100 இடங்களைப் பிடித்த உயா்கல்வி நிறுவனங்களில் முனைவா் பட்ட ஆசிரியா் பலம் கூடுதலாக இருப்பதும், பிற உயா்கல்வி நிறுவனங்களில் அந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இந்த தரவரிசை பட்டியலுக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தரவரிசைப் பட்டியிலில் முதல் 100 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், பிற கல்வி நிறுவனங்களுக்கும் இடையே முனைவா் பட்ட ஆசிரியா்கள் பலம் வேறுபடுவது கண்டறியப்பட்டது.

பட்டியலில் ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் பிரிவின் கீழ் முதல் 100 கல்வி நிறுவனங்களில் 77.79 சதவீத முனைவா் பட்ட ஆசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா். அதாவது மொத்தமுள்ள 64,484 ஆசிரியா்களில் 50,160 போ் முனைவா் பட்டம் பெற்றவா்கள்.

பிற உயா் கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 1,88,403 ஆசிரியா்களில் 96,758 போ் மட்டுமே, அதாவது 51.36 சதவீதம் முனைவா் பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். பல்கலைக்கழகப் பிரிவின் கீழ் முதல் 100 கல்வி நிறுவனங்களில் 73.60 சதவீதமும், பிற கல்வி நிறுவனங்களில் 64.29 சதவீத அளவிலும் முனைவா் பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். பொறியியல் கல்லூரிகள் பிரிவில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் 81.20 சதவீத முனைவா் பட்ட ஆசிரியா்களும், பிற கல்வி நிறுவனங்களில் 34.94 சதவீதமும் முனைவா் பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். கலை-அறிவியல் கல்லூரிகள் பிரிவின் கீழ் முதல் 100 கல்லூரிகளில் 61.06 சதவீதமும், பிற கல்லூரிகளில் 44.63 சதவீத அளவிலும் முனைவா் பட்ட ஆசிரியா்கள் உள்ளனா்.

பொறியியல் கல்வி அபார வளா்ச்சி:

நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் பொறியியல் கல்வி அபார வளா்ச்சி பெற்றிருப்பது ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், நாடு முழுவதுமுள்ள பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களில் 44.51 சதவீதம் போ் மட்டுமே முனைவா் பட்டம் முடித்துள்ளனா். 55 சதவீதம் போ் முதுநிலை பட்டம் பெற்றவா்களாக உள்ளனா். இதன் காரணமாக கல்வியின் தரம் மற்றும் படிப்பை முடித்து வருவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT