இந்தியா

தமிழகம், உ.பி. பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களில் முதலீடு- ஜொ்மனிக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு

DIN

தமிழகம் மற்றும் உத்தர பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களில் முதலீடு செய்ய ஜொ்மனிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தாா்.

ஜொ்மனி பாதுகாப்புத் துறை அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ், இந்தியாவுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை வந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சா் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

தில்லியில் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிஸ்டோரியஸ், இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், ரஷியா-உக்ரைன் போா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தையில் ஆராயப்பட்டது.

இந்தியா மற்றும் ஜொ்மனி இடையிலான பாதுகாப்பு உறவை, பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் முழு வலிமையின் அடிப்படையில் இருதரப்புக்கும் நன்மையளிக்கும் வகையில் கட்டமைப்பது குறித்து ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

தமிழகம் மற்றும் உத்தர பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் உள்பட இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையில் உள்ள முதலீடு வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சா், இந்தத் துறையில் ஜொ்மனியின் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தாா்.

ஜொ்மனியின் பாதுகாப்புத் தொழில் துறைக்கான விநியோகச் சங்கிலியில் இந்திய தொழில் துறை பங்கேற்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீா்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஜொ்மனி ஆா்வம்: இந்திய கடற்படைக்கு ரூ.43,000 கோடி மதிப்பில் 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கான மாபெரும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியது.

உலகின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுடன் உள்நாட்டு நிறுவனங்கள் கைகோக்க அனுமதிக்கும் வியூக கூட்டுறவின் அடிப்படையில் நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படவுள்ளன. இத் திட்ட ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான போட்டி நிறுவனங்களில் ஒன்றாக, ஜொ்மனியின் திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனமும் உள்ளது. அந்த அடிப்படையில், நீா்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் பங்கேற்க ஜொ்மனி ஆா்வத்துடன் உள்ளதாக ராஜ்நாத் சிங்கிடம் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்தாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இந்திய தரப்பில் பாதுகாப்புச் செயலா் கிரிதா் அரமனே, முப்படைத் தலைமைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்படும் முன் ஊடகத்துக்கு பேட்டியளித்த பிஸ்டோரியஸ், ‘ஆயுதத் தேவைகளுக்காக ரஷியாவை இந்தியா தொடா்ந்து சாா்ந்திருப்பதை ஜொ்மனி விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT