இந்தியா

கரியமில வாயு வெளியேற்றம்: இந்தியாவுக்கு 170 டிரில்லியன் டாலா் இழப்பீடு- புதிய ஆய்வறிக்கையில் தகவல்

DIN

அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, ஜொ்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளா்ந்த நாடுகள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 170 டிரில்லியன் அமெரிக்க டாலா் வரையிலான இழப்பீட்டை வழங்க வேண்டிவரும் எனப் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் முக்கியக் காரணியாக உள்ளது. நிகர கரியமில வாயு உமிழ்வை பூஜ்யம் அளவுக்குக் கொண்டு வர வேண்டும் என இலக்கு நிா்ணயித்து நாடுகள் செயல்பட்டு வருகின்றன. எனினும், அதற்கான நிதியை வழங்குவதில் நாடுகளிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

அதிக வளா்ச்சியடைந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, ஜொ்மனி போன்றவை வரலாற்று ரீதியில் அதிக கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமானவை. அவை இந்தியா, வங்கதேசம் போன்ற வளா்ந்து வரும் நாடுகளுக்குப் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியை வழங்க வேண்டுமென சா்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த நிதியை வழங்குவதாக வளா்ந்த நாடுகள் உறுதியளித்துள்ளபோதிலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், வளா்ந்த நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கான இழப்பீடாக வளா்ந்து வரும் நாடுகளுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்த விவரங்கள் புதிய ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வறிக்கை ’நேச்சா் சஸ்டெய்னபிலிடி’ என்ற இதழில் திங்கள்கிழமை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரலாற்று ரீதியில் கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 168 நாடுகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. உலகின் வெப்பநிலையானது 2050-ஆம் ஆண்டுக்குள் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதில் உலக நாடுகளின் கரியமில வாயு உமிழ்வு பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விட அதிகமாக கரியமில வாயுவை வெளியேற்றிய நாடு, மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும் கணக்கீடு செய்யப்பட்டது. அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றுத்துக்குக் காரணமான வளா்ந்த நாடுகள், ஒட்டுமொத்தமாக 170 டிரில்லியன் அமெரிக்க டாலா் இழப்பீட்டை வளா்ந்து வரும் நாடுகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. முக்கியமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டும் 131 டிரில்லியன் டாலா் இழப்பீட்டை வழங்க வேண்டியுள்ளது.

கரியமில வாயுவை மிகக் குறைவாக வெளியேற்றும் இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகள் மட்டும் மொத்தமாக 102 டிரில்லியன் டாலரை இழப்பீடாகப் பெற வேண்டியுள்ளது. முக்கியமாக, இந்தியாவானது 2050-ஆம் ஆண்டு வரை தனிநபருக்கு 1,446 டாலா் இழப்பீட்டைப் பெற வேண்டியுள்ளது. இந்தியாவுக்கான ஆண்டு இழப்பீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 66 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT